உத்திரமேரூர் அருகே, சேதமடைந்த வீடுகளில் அச்சத்துடன் வசித்து வரும் பழங்குடியின இருளர் சமுதாய மக்கள், புதிய வீடுகள் கட்டித்தர கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், பொற்பந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட கணபதிபுரம் பழங்குடியின இருளர் சமுதாய குடியிருப்பு பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்காக, 1996ஆம் ஆண்டு, தனியார் தொண்டு நிறுவன நிதி உதவியுடன், சீமை ஓடுகள் போட்ட இலவச தொகுப்பு வீடு கட்டித் தரப்பட்டது. தற்போது, 29 ஆண்டுகள் ஆன நிலையில், பெரும்பாலான வீடுகளில், மேற்கூரை ஓடு, கதவு, ஜன்னல் என அனைத்தும் சேதமடைந்து வசிக்க முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. மழைக் காலங்களில் தண்ணீர் கசிந்து வீட்டினுள் தேங்குவதால், அப்பகுதி மக்கள் குழந்தைகளுடன் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக கூறுகின்றனர். தற்சமயம் வீட்டின் மேற்கூரையின் மேல், தார்ப்பாய் போட்டு அச்சத்துடன் குடியிருந்து வருவதாக வேதனை தெரிவித்தனர். எனவே, அரசு சார்பில் இலவச தொகுப்பு வீடுகள் கட்டித்தருமாறு, அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.