தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், தடுப்பணை சேதமடைந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2012ஆம் ஆண்டு, ஒரு கோடி ரூபாய் செலவில் இருபுறமும் தடுப்புச் சுவர்களுடன் கட்டப்பட்டிருந்த தடுப்பணையின் குறிப்பிட்ட பகுதிகள், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இந்நிலையில், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளதாக உழவர்கள் கவலை தெரிவித்தனர்.மயிலாடும்பாறை அருகே மூல வைகை ஆற்றில், பொதுப்பணித் துறையினர் மூலம் ஒரு கோடி ரூபாய் செலவில் இருபுறமும் தடுப்பு சுவர்களுடன் கட்டப்பட்டிருந்த தடுப்பணை சேதமடைந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளது. ஆற்று நீர் வீணாகும் நிலையும், ஐந்து ஊராட்சிகளில் இருக்கும் 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நிலத்தடி நீர்மட்ட ஆதாரம், குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்றும் கிராம மக்கள் கூறினர். இந்த பகுதிகளுக்கு செழிப்பாக தண்ணீர் வழங்கி வந்த இந்த தடுப்பணையை உடனடியாக சீரமைக்க, தமிழக அரசும் தேனி மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிராம மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.