சீர்காழி அருகே கன மழையினால், 1000 ஏக்கர் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவுப் பயிர்கள் மழை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட திட்டை, தில்லைவிடங்கன், சிவனார் விளாகம், செம்மங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால், முளைக்க தொடங்கிய நேரடி நெல் விதைப்பு நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி, தண்ணீர் வடிய வழியில்லாமல் அழுகும் நிலையில் உள்ளது. இதேபோல், நடவு செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்களும் மழை நீரில் மூழ்கி வீணாகி வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் 1000 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். இந்நிலையில், கூடுதல் செலவு செய்து விவசாயிகள், வயல்களில் உள்ள மழை நீரை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். உடனடியாக பாதிக்கப்பட்ட விளை நிலங்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வேதனையோடு தெரிவித்தனர்.