நாகை மாவட்டத்தில், குறுவை நெற்பயிர்களை பதறாக்கும் புகையான் பூச்சியால், மகசூல் பாதிப்பதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில், சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது குறுவை நெற் பயிர்கள் குருத்து விடும் பருவத்தில், விட்டு விட்டு மழை பெய்து வருவதால், நெற் பயிர்களை புகையான் பூச்சிகள் தாக்கி வருகிறது. கீழ்வேளூர், கீழையூர், தலைஞாயிறு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இந்த புகையான் பூச்சியால், குறுவை நெற் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சித்தாய்மூர், கீரம்பேர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெருமளவு குறுவை சாகுபடி செய்யப்பட்டு இன்னும் ஒரு வாரத்தில் அறுவடை செய்யப்பட உள்ளது. இந்த சூழலில் புகையான் பூச்சி தாக்குதலால் சுமார் 1000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட விளைநிலத்தில் பயிர்கள், பதராக மாறியது. பாதிக்கப்பட்ட விளை நிலங்களை வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினர். துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, இயற்கை பேரிடராக அறிவித்து, உரிய நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.