தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் திருநாளையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்... நமசிவாயம் மந்திரத்தை ஜெபித்தபடி அருணாச்சலேஸ்வரர் தரிசனம் செய்த வெளிநாட்டினர்... உலகப் பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் திருநாளையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும், குறிப்பாக ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள், ஆன்மீக பக்தர்கள் அதிக அளவு திருவண்ணாமலைக்கு வருகை தந்து அருணாச்சலேஸ்வரர் தரிசனம் செய்து பின்னர் கோவில் பின்புறம் உள்ள மலையை சிவனாக எண்ணி 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர். தை மாத பிறப்பை ஒட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோயிலில் நடை திறக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க உண்ணாமலை அம்மன் உடனாகிய அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர், அதேபோன்று இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவிலின் ராஜ கோபுரம் நுழைவாயிலில் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்து வருகின்றனர். அதே போன்று அமெரிக்காவைச் சேர்ந்த வெளிநாட்டு பக்தர்கள் 50 க்கும் மேற்பட்டவர்கள் நமச்சிவாய மந்திரத்தை ஜெபித்தபடி சாமி தரிசனம் மேற்கொண்டனர். குறிப்பாக ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது, அது மட்டுமல்லாமல் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிவித்த பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்ததால் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.இதையும் படியுங்கள் : காவல் நிலையத்தில் பொங்கல் கொண்டாட்டம்