சம்பா நெல் பயிர்களுக்கான, பயிர் காப்பீடு, நவம்பர் 15ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான கால வரம்பு 15ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளதால், பயிர்க் காப்பீட்டு கட்டணமாக சம்பா நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.1393.08 செலுத்தி, விவசாயிகள் பயனடையலாம் என்றும் ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டம், ஷேமா பொது காப்பீட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. தற்போது சம்பா நெற்பயிர் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட சம்பா பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியான 15ஆம் தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே காப்பீடு செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சம்பா பயிர் சாகுபடி மேற்கொள்ளும், கடன் பெறும் விவசாயிகள் மற்றும் கடன் பெறா விவசாயிகள் என அனைவரும் அறிவிக்கை செய்யப்பட்ட பயிரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் இ-சேவை மையம் வாயிலாகவோ, தேசிய பயிர் காப்பீட்டு இணையதளமான www.pmfby.gov.in வாயிலாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம். இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது, முன் மொழிவு விண்ணப்பம் பதிவு விண்ணப்பம்கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல் இ-அடங்கல் விதைப்பு சான்றிதழ்வங்கி் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டண தொகையை செலுத்திய பின், அதற்கான ரசீதையும் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அல்லது வேளாண்மை அலுவலர் அல்லது உதவி வேளாண்மை அலுவலர் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அல்லது திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தையோ அணுகுமாறு ஆட்சியர் மோகனச்சந்திரன், கேட்டுக் கொண்டுள்ளார்.