அரியலூர் அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவலரை கொல்ல முயன்ற குற்றவாளிகள் 24 மணி நேரத்திற்கு மேலாகியும் இதுவரை கைது செய்யப்படவில்லை என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்த எக்ஸ் பதிவில், அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவலர் தமிழ் செல்வன் மீது லாரி ஏற்றியதில் அவருக்கு கைமுறிவு ஏற்பட்டுள்ளதாக அன்புமணி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு சட்டத்தின் மீது எந்த அச்சமும் இல்லை. அவர்களை கண்டு அதிகாரிகள்தான் அஞ்ச வேண்டியுள்ளது என குற்றம்சாட்டியவர், அந்த அளவுக்கு மணல் கடத்தல் கும்பல்களுக்கு செல்வாக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இதனால் தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா? அல்லது மணல் கடத்தல் கும்பல் ஆட்சியா? என்கிற சந்தேகம் எழுவதாக கேள்வி எழுப்பியவர், மணல் கொள்ளையை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.