திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த சோழவரம் அருகே குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வலியுறுத்தி சிபிஎம் கட்சியினருடன் இணைந்து பொதுமக்கள் வாழைக்கன்று நடும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். சோழவரம் அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட எடப்பாளையம் பகுதியில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள ஊராட்சி சாலைகள் குண்டும் குழியுமாக மாறி மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காணப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக கூறி, சிபிஎம் கட்சியினருடன் இணைந்து பொதுமக்கள் வாழைக்கன்று நடும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதிகாரிகளை வரவழைத்து சாலையை செப்பனிட நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்தனர். இதனை அடுத்து பொதுமக்கள் வாழைக்கன்று நடும் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர்.