விளாத்திகுளத்தில் திறக்கப்பட்ட மாட்டுச்சந்தையில், விவசாயிகள் ஆர்வமுடன் குவிந்தனர். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், புதூர், எட்டயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு மிகவும் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. ஆடு, மாடு, கோழி வளர்ப்பு அதிகமாக உள்ளது. எட்டயபுரத்தில் வாரம் தோறும் சனிக்கிழமை நடைபெறும் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை உள்ளது. இதனால் ஆடுகள் வளர்ப்போர் இந்த சந்தை மூலமாக ஆடுகளை விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், மாட்டுச் சந்தை இப்பகுதியில் இல்லை என்பதால், திருநெல்வேலி மேலப்பாளையம் அல்லது மதுரைக்கு தான் செல்ல வேண்டும். இந்நிலையில், விளாத்திகுளத்தில் வேம்பார் சாலையில், ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் முனியசக்தி ராமசந்திரன் ஏற்பாட்டின் பெயரில் தனியார் வார மாட்டுச்சந்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுடன் மாட்டுச்சந்தை திறந்து வைக்கப்பட்டது. வாரம் தோறும் வெள்ளிக்கிழமை இந்த மாட்டுச்சந்தை நடைபெறவுள்ளது. முதல்நாளான இன்று மதுரை, திருப்புவனம், ராமநாதபுரம், சாயல்குடி, சீவலப்பேரி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் மாடுகளை, வாங்க ஆர்வமுடன் வந்து இருந்தனர்.