கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு ரேஷன் அட்டை, ஆதார் அட்டை வழங்க வேண்டும் என்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் தலைமை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. விஷச்சாராய மரண சம்பவத்தை தொடர்ந்து, கல்வராயன் மலை பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு விசாரணையில், நீதிமன்ற உத்தரவின்படி அங்குள்ள மக்களுக்கு அடையாள அட்டை வழங்க 2000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதனை பரிசீலித்து அடையாள அட்டைகள் வழங்க 3 மாத காலம் அவகாசம் வேண்டும் என அரசு தரப்பில் கேட்கப்பட்டது, இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், அடையாள அட்டைகளை வழங்குவதற்கு எதற்கு 3 மாதங்கள் என கேள்வி எழுப்பினர்.