மதுரை மாவட்டம், செல்லூர் அருகே உடல் எடையை குறைக்க, வெங்காரம் என்ற மருந்தை சாப்பிட்ட மாணவி, ரத்தத்துடன் வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடற்பயிற்சி, சத்தான உணவு என ஆரோக்கியமான வழியை விட்டு, யூடியூபில் இயற்கை மருத்துவரின் வீடியோ பார்த்து வேதிப்பொருளை சாப்பிட்டதால் நேர்ந்த துயர சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.உடலை மெலிதாக்க நாட்டு மருத்துவம் சாப்பிட்டு அறியாமையால் உயிரிழந்த கல்லூரி மாணவி. மகள் போன சோகம் தாங்க முடியாமல் கண்ணீர் வடிக்கும் தந்தைக்கு என்ன ஆறுதல் சொல்ல முடியும்?வீடியோவால் வந்த வினை மதுரை, செல்லூர் மீனாம்பாள்புரம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் - விஜயலட்சுமி தம்பதியின் மகள் கலையரசி. இவர் தனியார் கல்லூரியில் முதலமாண்டு படித்து வந்த நிலையில் சற்று பருமனாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் தனது உடல் எடையை குறைத்து மெலிதாக தெரிய வேண்டும் என்பதற்காக சோசியல் மீடியாக்களில் கொட்டி கிடக்கும் வீடியோக்களை பார்த்து வழிமுறையை தேடி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இணைவோம் இயற்கையோடு என்ற யூடியூப் சேனலில் இயற்கையாக எவ்வாறு எடையை குறைப்பது என்ற வீடியோ ஒன்றை பார்த்திருக்கிறார். அதில் இயற்கை வைத்தியர் என பெயர் வைத்துக்கொண்டு கிருஷ்ணகுமார் என்பவர் வெங்காரம் டீரிட்மெண்டை கூறியதாக சொல்லப்படுகிறது. வெங்காரத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு மற்றும் தசைகளை உருக்கி உடல் குறையும் என கூறியிருக்கிறார். பெற்றோருக்கு ஏற்பட்ட பேரிடிஅந்த வீடியோவில், சொன்னதை போல் கடந்த சனிக்கிழமை பழுக்க காய வைத்த சட்டியில் வெங்காரத்தை பொறிய வைத்து, தேனுடன் கலந்து அவர் சாப்பிட்டதாக சொல்லப்படுகிறது. அதனை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே வெலவெலத்து போன மாணவிக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர், மகளை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். மாலையில் வீடு திரும்பிய இளம்பெண்ணுக்கு மீண்டும் உடல் நலம் குன்றியதால் மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சற்று உடல்நலம் தேறியவுடன் வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட மாணவிக்கு இரவு 11 மணியளவில் ரத்தத்துடன் வாந்தியும், வயிற்றுபோக்கும் ஏற்படவே, முதலில் சாதாரண வயிற்றுபோக்கு பிரச்சனை என நினைத்த பெற்றோருக்கு இடியாய் இறங்கியுள்ளது.கதறிய மகள், பரிதவித்த பெற்றோர்மாணவி தன் சுயநினைவை இழந்து என்ன விட்டுடாதப்பா, காப்பாத்துப்பா என கதறியதை கண்டு தவித்தபோன பெற்றோர், உடனே மகளை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். செல்லும் வழியிலும் வாந்தியும், வயிற்றுபோக்குமாக இருக்கவே, பெற்று வளர்த்த பெற்றோர் மடியிலேயே மகளின் உயிர் பிரிந்தது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சமூக வலைதளங்களில் பலர் கூறும் வழிமுறைகளை பின்பற்றுவதற்கு முன்பாக பலமுறை ஆராய வேண்டும் என்றும், டயட்டீஷியனை சந்தித்து முறையான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும் என தனியார் மருத்துவமனையின் மருத்துவர் யசோதா பொன்னுசாமி அறிவுறுத்தி உள்ளார். மிக கவனம் தேவை...உடலை ஃபிட்டாக வைத்திருக்க வேண்டுமென இன்றைய தலைமுறையினர் ஜிம்களுக்கு படையெடுத்து வரும் நிலையில், பலர் சமூக வலைதளத்தில் குப்பைகளை போல் கொட்டி கிடக்கும் டயட் முறைகளை பார்ப்பதையே ஒரு வேலையாக வைத்திருக்கின்றனர். இதனை பயன்படுத்தி கொண்டு பலரும் படித்து பட்டம் பெற்ற dietitian-களுக்கே டஃப் கொடுக்கும் வகையில், views, likes-க்காக கண்டவற்றையெல்லாம் கூறி வருவதன் விளைவு தான் இது போன்ற சம்பவம்.இதையும் பாருங்கள் - கல்குவாரியால் கதறும் விவசாயிகள்