தேனி மாவட்டம், கோம்பைத்தொழு பகுதியில் உள்ள சின்ன சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அருவிப் பகுதி பலத்த சேதமடைந்து உருக்குலைந்துள்ளது. மேகமலை வனப்பகுதியில் பெய்த தொடர் கனமழையால் கடந்த 6 நாட்களாக அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தற்போது குறையத் தொடங்கியுள்ளது. குளிக்கும் பகுதியில் பாதுகாப்பு தடுப்பு கம்பிகள் ஆக்ரோஷமாக பாய்ந்த வெள்ளத்தில் அடித்து சென்றதுடன், படிக்கட்டுகள் உடைந்தும் காணப்படுகிறது. அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை 6ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சேதங்களை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அருவிக்கு செல்லும் பாதையில் பல்வேறு இடங்களில், பாதையில் லேசான மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. சின்ன சுருளி அருவி அமைந்துள்ள பகுதி மிகவும் ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது.