தமிழ்நாடு சட்டப்பேரவையில். கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டம் 4 நாட்கள் நடைபெற்றது. தொடர்ந்து மார்ச் 14ஆம் தேதி சட்டப்பேரவையில் 2025-2026ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது. இதனையடுத்து, மார்ச் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 2 பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்றது.மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றன. பின்னர், தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், 6 மாத கால இடைவெளிக்கு பிறகு சட்டப்பேரவை இன்று தொடங்கியது. தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று (அக்.14) தொடங்கி, வரும் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற உள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன், ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன், நாகலாந்து மாநில ஆளுநர் இல. கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தமிழக அரசின் முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆகியோருக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.