கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை எப்படி தலையிட முடியும் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இக்கோவில் கனகசபையில் பக்தர்கள் தரிசிக்க உதவியதாகக் கூறி, நடராஜ தீட்சிதர் இடைநீக்கம் செய்யப்பட்டதை இந்து சமய அறநிலையத் துறை ரத்து செய்ததை எதிர்த்து பொது தீட்சிதர்கள் குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், அறநிலையத்துறை உத்தரவை அமல்படுத்தக் கோரி இடைநீக்கம் செய்யப்பட்ட நடராஜ தீட்சிதர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, நடராஜ தீட்சிதரின் சஸ்பெண்ட் காலம் முடிந்து அவர் தில்லை காளியம்மன் கோவிலில் சேவை செய்து வருவதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம் இரு வழக்குகளையும் முடித்து வைத்தது.