திருவண்ணாமலை அருகே தனது குழந்தையுடன் மருத்துவமனைக்கு சென்ற பெண் காணாமல்போய் மூன்று வாரத்திற்கு பிறகு கரும்பு காட்டில் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 4 சவரன் நகைக்காக செய்வதை எல்லாம் செய்துவிட்டு தனக்கும் கொலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதுபோல், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறியபடி அட்டைபோல் ஒட்டிக் கொண்டிருந்த இளம்பெண்ணையும் அவரது கள்ளக்காதலனையும் போலீசார் ஜோடியாக கைது செய்துள்ளனர். 4 சவரன் நகைகள் குறுகுறுவென கண்ணை உறுத்த, தோழியை கொன்று கரும்பு காட்டில் வீசிவிட்டு, கூடவே இருந்து குழிபறித்த குரூர புத்தி கொண்ட இந்த இளம்பெண்ணும் அவரது கள்ளக்காதலனும் 3 வாரமாக காக்கிகளின் கண்ணில் மண்ணை தூவியது பெரிய விஷயம் தான்.திருவண்ணாமலை மாவட்டம், கழிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளி சக்திவேல். இவருக்கும் அம்சா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 3 ஆண்டுகளுக்கு மேலாகும் நிலையில் ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த மாதம் 15ஆம் தேதி மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அம்சா. இரவு வெகுநேரமாகியும் மனைவி வீடு திரும்பாததால் பதற்றமடைந்த கணவன், பல இடங்களில் மனைவியை தேடியதோடு காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். இதனிடையே பெரியார் சிலை அருகே உள்ள சாலையில் ஒரு ஆண் குழந்தை தனியாக அழுது கொண்டிருப்பதாக போலீஸ் ஸ்டேஷனுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து அங்கு வந்த போலீசார், குழந்தையை மீட்டதோடு போட்டோவை வாட்ஸ்அப் குரூப், செய்தித்தாள் ஆகியவற்றில் வெளியிட்டு, இது யாருடைய குழந்தை, பெற்றோர் வந்து அழைத்து செல்லுமாறு பதிவிட்டுள்ளனர்.இதனை பார்த்த சக்திவேல் அடித்து பிடித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடி வந்துள்ளார். அதன் பிறகு தான் குழந்தை அவருடையது என்பதும், மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற தாய் அம்சாவை காணவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சக்திவேலிடம் விசாரணை மேற்கொண்டனர். கணவன், மனைவிக்குள் அடிக்கடி சின்ன சின்ன சண்டை ஏற்படும் என உறவினர்கள் கூறியதால் சக்திவேலை சுற்றியே விசாரணை வட்டமடித்தது. இதுஒருபுறமிருக்க, அம்சாவின் செல்போன் எண் டவரை வைத்தும் அலசி ஆராய்ந்தனர். அதில், அம்சாவின் செல்போன் எண் இறுதியாக அவலூர்பேட்டை சாலை ரயில்வே கேட்டை காண்பித்துள்ளது.அதனால், ரயில்வே தண்டவாளத்தில் விழுந்து அம்சா தற்கொலை செய்திருக்கலாம் என அங்கும் ஆய்வு செய்தனர் போலீசார். ஆனால், அதற்கான எந்த அறிகுறியுமே தென்படவில்லை.மேலும் கிராமத்தை சுற்றியுள்ள விவசாய கிணறுகளிலும் தேடி பார்த்துள்ளனர். இருந்தும் பலனில்லை. இப்படியே 3 வாரங்கள், விசாரணையும், தேடுதலும் நடந்து கொண்டே இருந்த நிலையில், அம்சா 4 சவரன் நகைகள் அணிந்திருந்ததாக கூறி உள்ளார் சக்திவேல். அதன் பிறகு தான் நகைக்காக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலேயே விசாரணையை முன்னெடுத்தனர் போலீசார். அம்சாவிடம் அடிக்கடி பேசுபவர்கள் யார்? அவருக்கு நெருங்கிய தோழிகள் யாரேனும் இருக்கிறார்களா? என கேட்டுள்ளனர். அதற்கு, எங்கள் தெருவில் உள்ள நேத்ராவிடம் மட்டும் தான் தனது மனைவி பேசிப்பழகுவார் என கூறி உள்ளார் சக்திவேல்.அதன்பிறகு, நேத்ராவிடம் சாதாரண விசாரணை நடத்தினர் போலீசார். அந்த சாதாரண விசாரணை தான் பெரிய முடிச்சை, அவிழ்த்தது. போலீசார் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் திக்கித்திணறி பதில் சொன்ன நேத்ரா, ஒருகட்டத்தில் அவர்தான் கருப்பு ஆடு என்பதை தன் வாயாலேயே கக்கி உள்ளார். அக்டோபர் 15ஆம் தேதி மருத்துவமனைக்கு செல்வதற்காக கீழ்பென்னாத்தூரிலிருந்து திருவண்ணாமலை பெரியார் சிலை அருகே பேருந்தில் வந்து குழந்தையுடன் இறங்கி உள்ளார் அம்சா. அவலூர்பேட்டை சாலை ரயில்வே கேட் அருகே நடந்து சென்று கொண்டிருந்த நிலையில் அவ்வழியாக ஆட்டோவில் வந்த நேத்ரா, தன்னுடன் இருந்த திருப்பதி என்ற நபரை தனது உறவினர் என அறிமுகப்படுத்தியதோடு அவரது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் எனக்கூறியும் ஒரு டீ மட்டும் குடித்து விட்டு செல்லலாம், தானும் மருத்துவமனைக்கு வருவதாக கூறி அம்சாவை, நேத்ரா வற்புறுத்தி அழைத்து சென்றுள்ளார். தனது தோழி தானே என்ற நம்பிக்கையில் ஆட்டோவில் ஏறிய அம்சாவை வேங்கிக்கால் பகுதியில் உள்ள திருப்பதியின் வீட்டிற்கு அழைத்து சென்ற நேத்ரா, தோழியின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு அவர் அணிந்திருந்த செயின், கம்மல், மூக்குத்தி என 4 சவரன் நகைகளை எடுத்துள்ளார்.இதையடுத்து, சடலத்தை சாக்கில் மூட்டைகட்டி வீட்டுக்குள்ளேயே வைத்த நிலையில் பசியாலும், தாயை காணாததாலும் அழுது கொண்டிருந்த குழந்தையை ஸ்கூட்டியில் அழைத்து சென்ற நேத்ராவும் திருப்பதியும், அம்சா பேருந்தில் இறங்கிய அதே இடத்திலேயே இரவு 7 மணியளவில் இறக்கி விட்டுள்ளனர். அதன்பின்னர், நள்ளிரவு வரை காத்திருந்த இருவரும் சாக்கு மூட்டையை எடுத்து சென்று ஏந்தல் புறவழிச் சாலையில் உள்ள கரும்பு காட்டில் வீசி உள்ளனர். இதனை தொடர்ந்து, அம்சாவின் நகைகளை தனது கள்ளக்காதலன் திருப்பதியிடம் ஒப்படைத்த நேத்ரா, தான் சொல்லும் வரை அதனை விற்கவோ அடகு வைக்கவோ வேண்டாம் என ஆர்டர் போட்டுவிட்டு எதுவுமே நடக்காததுபோல தனது வீட்டுக்கு சென்றுவிட்டார்.ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயான நேத்ரா, அம்சாவை அவரது உறவினர்கள் தேடும்போதும் போலீசில் புகார் அளித்தபோதும் உடன் நின்றுகொண்டே ஆறுதல்கூறி இரட்டை வேடம் போட்டுள்ளார்.ஆனால், அந்த இரட்டை வேடம் 3 வாரத்திற்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்ததால் தனது கள்ளக்காதலன் திருப்பதியுடன் சேர்ந்து சிறையில் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் நேத்ரா.இதையும் பாருங்கள் - Police POCSO Arrest | பாதுகாப்பு தருவதாக கூறி அத்துமீறல், சிறுமியிடம் பா*யல் சீண்டல் | Viluppuram