உலகப் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கற்பக விநாயகரை தரிசித்தனர். கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சதுர்த்தி திருவிழாவில், உற்சவர் கற்பக விநாயகர் ஒவ்வொரு நாளும் யானை, குதிரை, சிம்ம வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 23ஆம் தேதி கஜமுக சூரசம்ஹாரம் நடைபெற்றது. அப்போது, வெள்ளி மூஷிகம், யானை, குதிரை, ரிஷபம், பூதம் மற்றும் சிம்ம வாகனங்களில் கற்பகவிநாயகர் ஊர்வலம் வந்து பக்தர்களை பரவசப்படுத்தினார். விழாவின் 9ஆம் நாளான நேற்று, பக்தர்கள் எதிர்பார்த்திருந்த தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், பெரிய தேரில் உற்சவர் ஸ்ரீ கற்பக விநாயகர் எழுந்தருள, அதனைப் பின்தொடர்ந்து வந்த சிறிய தேரில் சண்டிகேஸ்வரர் எழுந்தருளினார். சண்டிகேஸ்வரரின் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து வழிபட்டது தனிச்சிறப்பு.விழாவின் முக்கிய நிகழ்வான விநாயகர் சதுர்த்தி விழா, இன்று அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகளுடன் துவங்கியது. பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து விநாயகரின் அருளைப் பெற்றுச் சென்றனர். இந்த விழாவின் உச்சகட்ட நிகழ்வான 'தீர்த்தவாரி' நண்பகல் 12 மணிக்கு நடைபெற்றது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மூலவருக்கு சாத்தப்படும் சந்தனக் காப்பு அலங்காரத்தில், கற்பக விநாயகர் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள், இந்த அரிய அலங்காரத்தில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை தரிசனம் செய்து மனமுருகினர்.