கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் கரூர் மின்வாரிய அதிகாரிகள் 7 பேர் விசாரணைக்காக ஆஜராகினர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் மின்சாரம் நிறுத்தப்பட்டதற்கான காரணம், முன்னேற்பாடு பணிகள் உள்ளிட்டவை குறித்து 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, இதுதொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி கடந்த அக்டோபர் 17ம் தேதி முதல் விசாரணை நடத்தி வருகிறது.