கரூர் சம்பவத்தில், சிபிஐ விசாரணை வேண்டும் என்ற தவெகவின் மனுவை மதுரை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.கரூரில், தவெக பிரச்சாரத்தின் போது, 41 பேர் உயிரிழந்த சம்பவம், உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. கரூரில் நடந்தது தொடர்பாக, அருணா ஜெகதீசன் விசாரித்து வரும் நிலையில், இதை எதிர்த்தும், வழக்கு விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்ற அமர்வில், தவெக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, ’ஒருவர் தவறு செய்தார் என்பதால் ஒட்டு மொத்த ஆணையத்தையும் குறை சொல்ல முடியாது. இதனால் அருணா ஜெகதீசன் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது’ என கூறி, அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதேபோல், ’கரூர் விவகாரத்தில் நடந்தது மிகப்பெரிய துயர சம்பவம். உங்களுடைய அரசியல் காரணங்களுக்காக நீதிமன்றத்தை பயன்படுத்தி கொள்ளாதீர்கள்’ என்று கூறிவிட்டு, கரூர் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரிய மனுவையும் தள்ளுபடி செய்து மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.