நடிகர் விஜய்யின் தவெக கொடிக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு:நடிகர் விஜய் புதியதாக தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறங்களை பயன்படுத்துவதற்கு தடை கோரி, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை சார்பில் அந்த சபையின் தலைவர் பச்சையப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு,நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரரான தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தரப்பு வாதம்:வணிக சின்னமாக பதியப்பட்ட எங்கள் சபையின் கொடியை பயன்படுத்துவது வணிக சின்ன சட்டத்தையும், பதிப்புரிமை சட்டத்தையும் மீறிய செயல். ஓரளவு ஒற்றுமையாக இருப்பதால் மக்கள் மத்தியில் இந்தக்கொடி குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியைப் பயன்படுத்த தவெகவுக்கு தடை விதிக்க வேண்டும். தவெக தரப்பு வாதம்:மனுதாரர் சபையோ, தவெகவோ எந்த வர்த்தகத்திலும் ஈடுபடவில்லை என்பதால், கொடி மீது உரிமை கோர முடியாது. மனுதாரர் கொடியை ஒப்பிடும் போது, தவெக கொடி முற்றிலும் வேறுபாடானது. தவெக கொடியால் எப்படி இழப்பு ஏற்பட்டது என்பதை மனுதாரர் விளக்கவில்லை என்பதால், தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இரு தரப்பு வாதங்களை கேட்டு, நீதிபதி அளித்த உத்தரவு:இரு கொடிகளையும் ஒப்பிடும் போது, மனுதாரர் சபை கொடியை தவெக பயன்படுத்தியுள்ளது எனக் கூற முடியாது. தவெக கொடி மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் எனக் கூற முடியாது. சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த தவெகவுக்கு தடை விதிக்க முடியாது. இடைக்கால தடை கோரிய தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.