"நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டத்திற்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது."நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டத்திற்கு எதிராக வழக்கறிஞர் சத்தியகுமார் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த மனு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே போன்ற வழக்கை ஏற்கனவே உச்சநீதிமன்றம் அபராதத்துடன் தள்ளுபடி செய்துள்ளதாக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தெரிவித்தார். இதனையடுத்து, மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதேபோல் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கு எதிரான வழக்கையும் தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரரான அதிமுக வழக்கறிஞர் இனியனுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.