புரட்டாசி மாதத்தையொட்டி, திருப்பதி கோயிலுக்கு 9ஆவது ஆண்டாக, நடை பயணம் சென்ற கிராம மக்களால், கிராமமே வெறிச்சோடியது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த குள்ளனூர், ஜம்புகுட்டப்பட்டி, கோணனூர் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த ஒன்பது ஆண்டுகளாக, மூன்று கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நடைபயணமாக சென்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், வழக்கம் போல் இந்த ஆண்டும் நடைபயணமாக கிராம மக்கள் ஒன்றிணைந்து விரதம் இருந்தனர். பெண்கள் மஞ்சள், சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்தும், ஆண்கள் காவி நிற ஆடையிலும் நடை பயணத்தை தொடங்கினர். இவர்கள் வழி நெடுகிலும் தங்கி, சமைத்து சாப்பிட அரிசி, பருப்பு, சமையல் பாத்திரங்கள், சிலிண்டர், மளிகை பொருட்களை டெம்போவில் எடுத்துச் சென்றனர். இங்கு, பற்ற வைத்த தீப் பந்தத்தை அணையாமல் எடுத்து சென்று திருப்பதி கோயிலில் தீபம் ஏற்ற உள்ளனர். இதனால், மூன்று கிராமங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது. இதுகுறித்து கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, போச்சம்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.