செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்க 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக பெண் வி.ஏ.ஓ., மற்றும் உதவியாளர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அருங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் தேன்மொழி. இவருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க தேர்வு செய்யப்பட்ட நிலையில் இதற்காக அருங்குன்றத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் சக்குபாய் என்பவரை தேன்மொழி அணுகி உள்ளார். இதற்காக விஏஓ10,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படும் நிலையில் தேன்மொழி அளித்த புகாரின் பேரில் செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், அறிவுறுத்தல்படி, ரசாயனம் தடவிய லஞ்ச பணத்தை தேன்மொழி வி.ஏ.ஓ., விடம் கொடுத்துள்ளார். அதற்கு வி.ஏ.ஓ., உதவியாளர் சரவணன் என்பவரிடம் கொடுக்க கூறியுள்ளார். பின் பணத்தை சரவணனிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், வி.ஏ.ஓ., சக்குபாய், உதவியாளர் சரவணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், அலுவலகம் முழுவதும் சோதனை செய்ததில் கணக்கில் வராத 70,000 ரூபாயை கைப்பற்றினர்.