திருவாரூர் மாவட்டத்தில் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 40 ரூபாய் வீதம் முன்கூட்டியே லஞ்சம் தர வேண்டியிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 40 கிலோ 200 கிராம் என்ற அளவில் எடை பிடிக்க வேண்டிய நெல் மூட்டைகளில், 42 கிலோ வரை எடை வைத்து கொள்முதல் செய்யப்படுவதாகவும், இதுகுறித்து கேள்வி எழுப்புவோரின் நெல்லை கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்துவதாகவும் கூறப்படுகிறது. வறட்சி, அதிக மழைப்பொழிவு, பருவம் தப்பி பெய்த மழை, அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறை என பல தடைகளை தாண்டி நெல் அறுவடை செய்தால், அதனை கொள்முதல் செய்வதற்கு லஞ்சம் தர வேண்டியிருப்பதாக விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.