தாய்ப்பால் தானம் தந்து, அசர வைத்துள்ளார் கன்னியாகுமரியை சேர்ந்த இளம்பெண். உலகில் குழந்தை பிறந்ததும், முதலில் கொடுக்க கூடிய உணவு தாய்ப்பால். இந்த உலகத்தில், தாய் பாலுக்கு ஈடு இணை வேறு எதுவும் இல்லாததால், அமிர்தமாக பார்க்கப்படும் தாய்ப்பாலை தானமாக கொடுத்து, பல பிஞ்சுகளின் உயிரை காப்பாற்றி இருக்கிறார் கன்னியாகுமரியை சேர்ந்த பட்டதாரி இளம்பெண்.கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்த மேட்டுக்கடை பகுதியை சேர்ந்த முகமது ரிஃபான் என்பவரின் மனைவி முபினா ரிஃபான். எம்பிஏ பட்டதாரியான இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும், 11 மாதமான ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. தனது குழந்தைக்கு பாலூட்டி வந்த முபினா ரிஃபான் தன் குழந்தையின் பசி போக எஞ்சிய தாய் பாலை சேகரித்து வந்துள்ளார். அப்போது தான், தாய் பால் இல்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு தனது பாலை தானமாக கொடுக்கும் எண்ணம் முபினாவுக்கு வந்தது. இதனால், முஃபினா, தானாக முன்வந்து அரசு மருத்துவமனையை தொடர்பு கொண்டு தாய் பால் தானமாக கொடுக்கப் போறேன் என்று கூறி உள்ளார். ஆனால், அங்கு இதுவரைக்கும் யாரும் தாய் பால் தானமாக கொடுப்பது இல்லை என்று, மருத்துவமனை தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. இதை கேட்டு, அப்படியே விட்டு விடாத முபினா, அடுத்ததாக என்ஜிஓ-க்களை தொடர்பு கொண்டு அவர்களது, வழிகாட்டுதலின்படி, கடந்த ஜனவரி மாதம் முதல், தாய்ப்பாலை தானமாக கொடுத்து வருகிறார். இதுவரைக்கும் 200 லிட்டர் தாய் பால் தானமாக கொடுத்த முபினா, தாய் பால் இல்லாத இளம்பிஞ்சுகளின் பசியை போக்க, இளம் தாய்மார்கள் தாய்ப்பாலை தானமாக கொடுக்க முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.