கோவை விமான நிலையம் அருகே, ஆள் அரவமற்ற பகுதியில், காரில், ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தை அதிர வைத்துள்ளது. அரிவாளால் கார் கண்ணாடியை உடைத்து, பெண்ணுடன் இருந்த ஆண் நண்பரை வெட்டியதுடன், 3 பேர் சேர்ந்து, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி ஓடி இருக்கிறார்கள். கோவை விமான நிலையம் அடுத்த பிருந்தாவன் நகர் அருகே, திடல் போன்ற காலி இடம் உள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத இந்த பகுதியில், இரவு 11 மணியளவில், காரில் ஆண் நண்பருடன் கல்லூரி மாணவி பேசிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அதே பகுதியில், மது அருந்திக் கொண்டிருந்த மூன்று இளைஞர்கள், வெகு நேரமாக கார் நிற்பதை கவனித்து காருக்கு அருகே சென்றிருக்கிறார்கள். காரில் ஆண் நண்பருடன், இளம்பெண் இருப்பதை கண்ட அந்த கும்பல், இருவரையும் காரை விட்டு கீழே இறங்குமாறு வற்புறுத்தியிருக்கிறது. இளைஞர்கள் எவ்வளவு கூறியும், காரை விட்டு இருவரும் இறங்க மறுத்ததால், ஒரு கட்டத்தில் மூன்று இளைஞர்களும் காரின் முன்பக்க கண்ணாடியை அரிவாளால் ஓங்கி வெட்டி சேதப்படுத்தவே, மாணவியும், ஆண் நண்பரும் வெலவெலத்து போயினர்.காரின் வலது புறமுள்ள கண்ணாடிகளை அரிவாளால் அந்த கொடூரன்கள் சுக்குநூறாக உடைத்தெறிந்தனர். பின்னர், இருவரையும் வெளியே இழுத்து வந்த அந்த இளைஞர்கள், ஆண் நண்பரை கொடூரமாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. அரிவாளை திருப்பி வைத்து ஆண் நண்பரை கொடூரமாக தாக்கியதில், ரத்தம் தெறித்து நிலை குலைந்து போனதாக சொல்லப்படுகிறது. அப்போதும் விடாமல் மாணவியை காப்பாற்ற அந்த ஆண் நண்பர், மூன்று கொடூரன்களிடமும் போராடியதாக கூறப்படும் நிலையில், ஒருவர் மாற்றி ஒருவர் தாக்கி, அவரை ஓட வைத்ததாக கூறப்படுகிறது.ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்து ஓடிய அந்த ஆண் நண்பர், காவல்துறை அவசர உதவி எண்ணான 100க்கு அழைத்து நடந்தவற்றை கூறியிருக்கிறார். இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர்.ஆனால், போலீஸ் சம்பவ இடத்திற்கு வரும் முன்பே, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டது அந்த கொடூரக் கும்பல். கார் நிறுத்தப்பட்டிருந்த 100 மீட்டர் தொலைவில் மாணவியை தூக்கி சென்ற குரூர மனம் படைத்த அரக்கன்கள், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே ஆண் நண்பரையும் அழைத்துக் கொண்டு, போலீசார் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள், அங்கிருந்து அந்த கும்பல் தப்பியது. அங்கு மயக்க நிலையில், நிர்வாணமாக கிடந்த கல்லூரி மாணவியை மீட்ட போலீசார் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, காரில் கிடந்த துப்பட்டா, ஹேண்ட் பேக், காலணியை பறிமுதல் செய்த போலீசார் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தினர். மாணவிக்கு கொடுமை இழைத்த நபர்கள் உள்ளூர் இளைஞர்களா? அல்லது வடமாநிலத் தொழிலாளர்களா? என ஏழு தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்த பகுதியிலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் சிசிடிவி கேமராக்கள் இல்லாத நிலையில், குற்றவாளிகளை பிடிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கோவை விமான நிலையம் அருகே காவல்துறை பாதுகாப்பு பலமாகவே இருக்கும் நிலையில், விமான நிலையம் பின்புறமே மாணவிக்கு இப்படிப்பட்ட கொடுமை நிகழ்ந்தது பாதுகாப்பை கேள்விக்குள்ளாகி உள்ளது. அந்த காலி இடம், மது அருந்தும் சமூக விரோதிகளின் கூடாரமாகவே இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில், ரோந்து போலீசார் கவனிக்க தவறியது ஏன்? ரோந்து பணியில் ஈடுபடுவதில் போலீசார் கோட்டை விட்டதா? என கேள்வி எழுகிறது.இதையும் பாருங்கள் - கோவை பா*யல் வன்முறை சம்பவ இடத்தில் சிக்கிய ஆதாரம் | Covai Girl Harassment Case | Police