மதுரை மாநகராட்சியின், தெற்கு மண்டல அலுவலகம் முன்பு குப்பைகளை கொட்டி, பாஜக கவுன்சிலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். முனிச்சாலையில் உள்ள சுடுகாட்டில், மாநகராட்சி நிர்வாகம் குப்பை கழிவுகளை கொட்டி செல்வதால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனை அகற்ற கோரியும் கவுன்சிலர் பூமா ஜனா ஸ்ரீ முருகன் போராட்டத்தில் ஈடுபட்டார். மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட 86ஆவது வார்டு பகுதியில் பூமாஜனா ஸ்ரீ முருகன், பாஜக மாமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில், அவர் தனது வார்டு பகுதியில் உள்ள மின் மயானத்தின் உள்ளே குப்பைகளை மாநகராட்சி நிர்வாகம் கொட்டுவதால், துர்நாற்றம் வீசுகிறது என்று கூறி, பல முறை அகற்ற நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தான் பாஜக கவுன்சிலர் என்பதால் பாரபட்சத்துடன் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார். தெற்கு மண்டல அலுவலகத்தில் தனது வார்டு மக்களுடன் வந்து, இரண்டு சாக்கு பைகள் நிறைய சுடுகாட்டிலுள்ள குப்பைகளை எடுத்து வந்து தரையில் கொட்டி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே, அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர் மற்றும் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இனிமேல் சுடுகாட்டு பகுதியில் எந்த குப்பையும் மாநகராட்சி சார்பில் கொட்டப்படாது என்று உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலந்து சென்றனர்.