வாக்காளர் சிறப்பு திருத்தத்தின் மூலம் பீகாருக்கு ஏற்பட்ட நிலை தமிழகத்திற்கு ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் விழிப்புடன் இருப்பதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற திமுக எம்பி என்.ஆர்.இளங்கோவின் மகள் திருமண விழாவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். இந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:பீகாரில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சிறப்பு வாக்காளர் திருத்தம், பல பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு எதிராகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சகோதரர் ராகுல் காந்தி பேரணி மேற்கொண்டிருக்கிறார். பீகாரில் நடந்ததை தமிழ்நாட்டில் நடக்க விடாமல் தடுத்து நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருபவர் தான் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. வாக்காளர் சிறப்பு திருத்தத்தின் மூலம் பீகாருக்கு ஏற்பட்ட நிலை தமிழகத்திற்கு ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் விழிப்புடன் இருக்கிறேன். அரசு முறைப் பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு செல்கிறேன். அங்கு நடைபெறவுள்ள ஒரு முக்கியமான நிகழ்வை இப்போது அறிவிக்க விரும்புகிறேன். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் திருவுருப்படம் திறக்கப்பட உள்ளது. பெரியார் உலக அளவில் அங்கீகரிக்கப்படுவது தமிழ்நாட்டுக்கு பெருமை.ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் அறிவாசான் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை நான் திறந்துவைக்க உள்ளேன். அதை எண்ணிப் பார்க்கும்போது நான் இப்போதே மகிழ்ச்சிக் கடலில் மிதக்கிறேன்இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.