ஆந்திரா மற்றும் தமிழக எல்லையில், தொடர் மழையின் காரணமாக தடுப்பணைகள் நிரம்பி வழிவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சி, ஆந்திர மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில், ஆரணி ஆற்றங்கரையோரத்தில், கடந்த சில தினங்களுக்கு முன் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இந்நிலையில், தற்போது ஆரணி ஆற்றின் குறுக்கே ஊத்துக்கோட்டை அருகே சிட்ரம்பாக்கம் தடுப்பணை மற்றும் பெரியபாளையம் அடுத்த பாளேஸ்வரம் தடுப்பணை நிரம்பி வழிகின்றன. இந்த தடுப்பணைகள் நிரம்பியதால், நிலத்தடி நீர் வெகுவாக உயரும் என்றும், முப்போகம் விவசாயம் மேற்கொள்ள தண்ணீர் தங்கு தடையின்றி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் கூறி மகிழ்ச்சி அடைந்தனர். நிரம்பி வழியும் தடுப்பணைகளில் பொதுப்பணித்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஆபத்தை உணராமல், பொது மக்கள் வாகனங்களை கழுவியும் துணிகளை துவைத்தும் குளித்தும் வருகின்றனர் என்றும் விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.