சென்னை அருகே உத்தண்டியில் உள்ள நைனார் குப்பத்தில், சுமார் 100 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த மயானத்தை பயன்படுத்தக் கூடாது என போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் தடுத்ததால், கொந்தளித்த மீனவ மக்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மயானத்தில் உடலை புதைக்க போலீசார் எதிர்க்க காரணம் என்ன என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..உத்தண்டியில் உள்ள நைனார் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,500 மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நூறு ஆண்டுகளுக்கு முன்பு வி.வி. வெங்கட சுப்பிரமணியம் வழங்கிய நிலத்தை அவர்கள் மயானமாக பயன்படுத்தி வருவதாக தெரிகிறது. இந்நிலையில், வி.வி.வெங்கட சுப்பிரமணியத்தின் வாரிசுகளில் ஒருவரும் கடலூர் எம்.பி.விஷ்ணு பிரசாத்தின் மனைவியுமான சங்கீதா, மயான நிலம் தங்களுக்குச் சொந்தமானது என்றும், அங்கு உடலை புதைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து சென்னை மாநகராட்சியிடம் விளக்கம் கேட்டு மயானத்தை பயன்படுத்த தற்காலிக தடை விதித்தது.தொடர்ந்து, மயானத்தை பயன்படுத்தக்கூடாது என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டது. நூறாண்டுகளாக பயன்படுத்தி வந்த இடத்தில் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்கக் கோரி இறந்தவரின் உடலுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கானத்தூர் காவல் துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படாததால் நாகராஜன் உடலை மயானத்திற்கு மக்கள் கொண்டு சென்றனர். மயானத்திற்கு செல்லும் வழியில் இருந்த எச்சரிக்கை பலகையை பார்த்த மக்கள் அவற்றை அடித்து நொறுக்கினர். அப்போது போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த பெண்கள் போலீசாரை சுற்றிக் கொண்டதால் போலீசார் செய்வதறியாது தவித்தனர்.உயிரிழந்த நாகராஜனின் மகனை மயானத்திற்கு பொதுமக்கள் அழைத்து செல்லும்போதும் போலீசார் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.நூறாண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வரும் மயானத்தை தற்போது பயன்படுத்தக் கூடாது என்றால் இறந்தவரின் உடலை எங்கே புதைப்பது? என மீனவ மக்கள் கொந்தளித்தனர்.தொடர்ந்து, போலீசாரின் எதிர்ப்பையும் மீறி நாகராஜனின் உடலை நைனார் குப்பம் மயானத்தில் பொதுமக்கள் அடக்கம் செய்தனர். நைனார் குப்பம் மயானத்தை தற்காலிகமாக பயன்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இறந்தவரின் உடலை அங்கு மக்கள் புதைத்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.