உடல் உறுப்புகளை தானம் செய்த ஆட்டோ ஓட்டுனர் உடலுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் சாமுடி வட்டம் பகுதியைச் சேர்ந்த துரைசாமியின் மகன் 40 வயதான சின்னமுத்து. ஆட்டோ ஓட்டுனரான இவர், இரண்டு தினங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்தார். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சின்னமுத்துவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்தனர். இதனை தொடர்ந்து, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், இரண்டு நாட்களாக சிகிச்சையில் இருந்த சின்னமுத்து, மூளை சாவடைந்து உயிரிழந்தார். இதையடுத்து, சின்னமுத்துவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். சின்ன முத்துவின் கண்கள், கணையம், இதயம், கிட்னி உள்ளிட்ட ஏழு உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சின்னமுத்துவின் உடலுக்கு வருவாய் கோட்டாட்சியர் வரதராஜன், மாவட்ட சுகாதார அலுவலர் வினோத், திருப்பத்தூர் வட்டாட்சியர் நவநீதம் ஆகியோர் இறுதி சடங்கில் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணியும் மரியாதை செலுத்தினார்.