மதுரை உசிலம்பட்டி அருகே பள்ளி மாணவிகளை ஏற்றி சென்ற ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 4 ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். வடுகபட்டி விலக்கு பகுதியில் இருந்து 4 பள்ளி மாணவிகளை ஏற்றி கொண்டு சென்ற ஆட்டோ மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றது. அப்போது மதுரை நோக்கி சென்ற இருசக்கர வாகனம் ஆட்டோ மீது மோதியதில், ரித்திகா என்ற மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக உசிலம்பட்டி நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.