வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே வீட்டை வாடகைக்கு எடுத்து அலுவலகமாக வைத்திருந்த வழக்கறிஞர், இரண்டு ஆண்டுகளாக வாடகையே தராமல் அராஜகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், வீட்டை காலி செய்ய கூறி அலுவலகம் சென்ற உரிமையாளரான 75 வயதான மூதாட்டியையும், அவரது மகனையும் அலுவலகத்துக்குள் வைத்து, வழக்கறிஞர் பூட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாடகையே தராமல், வாழ்க்கையை ஓட்ட பார்த்த வழக்கறிஞர், கட்டட உரிமையாளரையே அலுவலகத்துக்குள் வைத்து பூட்டிவிட்டு சிறகடித்துள்ளார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் போஸ் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை செவிலியர் சந்திரா. கணவர் உயிரிழந்து விட்ட பின்பு, சொத்துபத்தின் நிர்வாகம் அனைத்தும் மனைவி சந்திராவுக்கு வந்திருக்கிறது. அதில், சுண்ணாம்புபேட்டையில் உள்ள அவர்களுக்கு சொந்தமான வீட்டின் வாடகை மனைவிக்கு வந்துக்கொண்டிருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து அலுவலகமாக நடத்தி வந்திருக்கிறார் வழக்கறிஞர் ராமசந்திரன். ஒழுங்காக நேரம் தவறாமல் வாடகையை கொடுத்து வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக வாடகையையே கொடுக்காமல் வழக்கறிஞர் ஓசியில் மங்கலம் பாடி வந்ததாக சொல்லப்படுகிறது. ஜோலார்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞரிடம், உரிமையாளரும், அவரது 3 மகன்களும் தொடர்ந்து வாடகை கேட்டு அசந்து போனது தான் மிச்சம். எதற்கும் அசையாத வழக்கறிஞர் வாடகையை இப்போது தருகிறேன், அப்போது தருகிறேன என போக்கு காட்டி வந்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளாக பொருத்து பொருத்து பார்த்த அவரது குடும்பத்தினர், அப்பகுதியை சேர்ந்தவர்களை வழக்கறிஞரிடம் அழைத்து சென்று வீட்டை காலி செய்ய கேட்டனர். அப்போது 31ஆம் தேதி அலுவலகத்தை காலி செய்து விடுகிறேன் என வழக்கறிஞர் உறுதியளித்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், அவர் வீட்டை காலி செய்வதற்கான எந்த அறிகுறியும் தெரியாததால், கடந்த 30ஆம் தேதி அலுவலகத்துக்கு சந்திராவும், அவரது மூத்த மகன் இம்ரானும் சென்றனர். அப்போது அலுவலகத்தை காலி செய்வதற்கு மறுத்த வழக்கறிஞர் ராமச்சந்திரன் மழுப்பியதாக தெரிகிறது. இதனைதொடர்ந்து அலுவலகத்தை காலி செய்யவில்லையெனில் இந்த இடத்தை விட்டு நகரவே மாட்டோம் என உரிமையாளரும், அவரது மகனும் கட் அண்ட் ரைட்டாக கூறவே, அலுவலகத்தின் கதவை இழுத்து மூடிவிட்டு, வழக்கறிஞர் புறப்பட்டு சென்றதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து, சந்திராவின் உறவினர்கள் வழக்கறிஞர் அலுவலகம் முன்பு திரண்ட நிலையில், கடப்பாரையால் கதவின் லாக்கை உடைத்து இருவரையும் வெளியே கொண்டு வந்தனர். இவ்விவகாரம் தொடர்பாக குடியாத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.