விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை செளடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்க கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் இருசக்கர வாகனத்தில் வந்திருந்தனர். அப்போது பொங்கல் நிகழ்ச்சி முடிந்த பின்பு கல்லூரிக்கு வெளியே வந்த மாணவர்கள் சிலர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களை சாலையில் அதிவேகமாக இயக்கினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மாணவர்கள் சாலையில் இருசக்கர வாகனங்களில் ஆட்டம் போட்டதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். இந்நிலையில் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய ஆய்வாளர் கங்கைநாதபாண்டியன் தலைமையில் போலீசார் விரைந்து செயல்பட்டு இரவோடு இரவாக கமுதி, ராமசாமிபுரம், கிளாமரம், பெருநாழி பகுதியை சேர்ந்த அந்த மாணவர்களின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த மாணவர்களையும் மாணவர்களின் பெற்றோர்களையும் நகர் காவல் நிலையத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு போலீசார் தக்க அறிவுரை வழங்கினர். மேலும் அதிவேகமாக வாகனங்களை இயக்கியது, ஹெல்மெட் அணியாமல் சென்றது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் சென்றது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஒவ்வொரு இருசக்கர வாகனத்திற்கும் தலா ரூ 11,000 அபராதம் விதித்தனர். மேலும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் ஏற்படுத்தும் வகையில் இரு சக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்கிய மாணவர்கள், போலீசார் தங்களுக்கு அறிவுரை வழங்கியதாகவும், இனிமேல் இது போன்ற தவறு செய்யமாட்டோம் எனவும், எங்களை போன்று யாரும் இதுபோன்று இருசக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்க வேண்டாம் எனவும் மன்னிப்பு கேட்டனர்.இதையும் படியுங்கள் : ஹனி டிராப் செய்து மிரட்டிய தம்பதி