இரண்டு ஆண்டுகளாக, காவி உடையில் தலைமறைவாக இருந்த போக்சோ குற்றவாளியை, காவி உடையிலேயே சென்று, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த செந்தில்நாதன், டியூசன் சென்டர் நடத்தி வந்தார். 44 வயதான இவர், ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளின் தந்தை. ஆனால், மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி தன்னிடம் டியூஷன் படித்த பிளஸ்-1 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து, வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு, போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, செந்தில்நாதனை தேடி வந்தனர்.செந்தில்நாதன் காசிக்கு சென்று, சாதுக்களுடன் பழகி 6 மாத காலம் தங்கி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். அங்கு, ஜோதிடம் கற்று, கோயில் கோயிலாக சுற்றி வந்துள்ளார். இந்நிலையில், இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு, சன்னியாசியாக, திருச்செந்தூர் கோயிலில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை உதவி காவல் ஆய்வாளர் மகாராஜன் தலைமையிலான போலீசார், காவி உடையுடன் திருச்செந்தூர் சென்று குற்றவாளி செந்தில்நாதனை தேடி வந்தனர். அப்போது, "அப்பா முருகா, உன் பெயரை சொல்லி எங்களுக்கு ’தண்ணி’ காட்டும் போக்சோ குற்றவாளியை கைது செய்ய அருள் புரிய மாட்டாயா?" என போலீசார் காவி உடையில் வேண்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. அடுத்த நொடியே குற்றவாளி கண்ணில் தென்பட்டுள்ளார். களத்தில் இறங்கிய போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, குற்றவாளியை வேலுர் மத்திய சிறையில் அடைத்தனர்.