புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே புனரங்குளம், அரியாணிப்பட்டி ஆகிய பகுதிகளில் 3 ஆண்டுகளாக விதிகளை மீறி மண் திருட்டு சம்பவம் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குவாரி அமைத்து 60 அடிக்கும் மேலாக மண் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மண் திருட்டு மாஃபியாக்களிடம் அரசு அதிகாரிகளே லஞ்சம் பெற்றுக் கொண்டு கண்டு கொள்ளாமல் இருப்பதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே புனரங்குளம் கிராமத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு சண்முகம் என்பவர் சுமார் 4 ஏக்கர் தனியார் நிலத்தை குத்தகைக்கு எடுத்து குவாரி நடத்தி வந்ததாக தெரிகிறது. 2022ல் குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலப்பரப்பில் தற்போது சுவடே தெரியாமல் போகும் அளவுக்கு மண்கொள்ளை நடந்திருப்பதுதான் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குவாரிகள் வைத்து மண் அள்ள 3.50 அடி முதல் அதிகபட்சமாக 6.50 அடி வரை மட்டுமே அரசு அனுமதி கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், சட்ட விதிகள் காற்றில் பறக்கப்பட்டுள்ளன என்றே சொல்லலாம்.4 ஏக்கர் மட்டும் குத்தகைக்கு எடுத்ததாக கூறிவிட்டு, புனரங்குளம் பகுதியில் குவாரி அமைத்து சுமார் 20 ஏக்கருக்கு மேல் மண் அள்ளப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக 6.50 அடி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தும், சுமார் 50 அடிக்கும் மேலாக மண் திருட்டு சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவு பகலாக சுமார் 6க்கும் மேற்பட்ட லாரிகளை கொண்டு பொக்லைன் உதவியுடன் தொடர் மண் திருட்டு நடைபெற்று வருவதாக கூறப்படும் சம்பவம் வேதனைக்குள்ளாக்குகிறது.புனரங்குளம் மட்டுமல்லாமல் அருகிலுள்ள அரியானிப்பட்டி கிராமத்திலும் இதே போன்று சுமார் 50 அடிக்கு மேல் மண் திருட்டு சம்பவம் நடைபெறுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வாயை பிளக்கும் அளவுக்கு மண் திருட்டு சம்பவம் நடந்து வரும் போதிலும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், கனிமவள கொள்ளையில் ஈடுபடும் மாஃபியாக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கும் லஞ்சம் கொடுத்து கொள்ளையில் ஈடுபடுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த மண் திருட்டின் மூலமாக அரசுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று வேதனையுடன் தெரிவித்த காவிரி ஆறு மற்றும் நீர்வள ஆதார பாதுகாப்பு சங்க தலைவர் சுடலைக்கண்ணு, அரசாங்கம் எப்படி சட்டவிரோதிகளை விட்டு வைத்தது எனக் கேள்வி எழுப்பினார். லாரிகளில் மண் அள்ளிக்கொண்டு செல்லும்போது வெறும் 9 அல்லது 12 மெட்ரிக் டன் மண் மட்டுமே அள்ளிச் செல்வதாக கணக்கு காட்டிவிட்டு, அதிகபட்சமாக 45 டன் வரை மண் அள்ளி செல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், லாரிகளின் அதிக பாரம் காரணமாக, புதிதாக போடப்பட்ட தார் சாலை கூட குறுகிய காலத்திலேயே சேதம் அடைந்து விடுவதாக சுடலைக் கண்ணு வேதனை தெரிவித்தார்.அதிகபட்சம் ஆறரை அடி மட்டுமே மண் அள்ள அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், சுமார் 10 மடங்கு மண் திருட்டு சம்பவம் நடைபெற்றிருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. மண் திருட்டு சம்பவம் இனியும் தொடராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இதையும் பாருங்கள் - CBI ஆபீசுக்குள் நுழைந்த தவெகவினர்