சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் 42 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்காவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, சுற்றுச்சூழல் கல்வி குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் கல்வி சுற்றுலாவையும் கொடியசைத்து தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுடன் சேர்ந்து தொல்காப்பிய பூங்காவை பார்வையிட்டார். பூங்காவில் புதிய நுழைவுவாயில், பார்வையாளர் மாடம், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி உள்ளிட்ட வசதிகள் உள்ளிட்டவை, இங்கு அமைக்கப்பட்டுள்ளன.ராஜா அண்ணாமலைபுரம், டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில், இந்த பூங்கா உருவாக்கப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதியால், 2008ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம், 58 ஏக்கர் பரப்பினை கொண்ட அடையாறு உப்பங் கழியினை சீரமைத்து, 'தொல்காப்பிய பூங்கா' உருவாக்கப்பட்டு, 2011ல் பொது மக்களின் பயன்பாட்டிற்காக இந்த பூங்கா திறந்து வைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.