திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், திருக்கார்த்திகைத் தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், இன்று அதிகாலை 3.30 மணி அளவில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோயில் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அருணாச்சலேஸ்வரர் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து, பெரிய நந்தி முன்பு, 5 அகல் விளக்குகளில் பஞ்சமுக தீபமும் ஏற்றப்பட்டது. அப்போது, நள்ளிரவு முதலே கோயில் வளாகத்தில் குழுமியிருந்த ஏராளமான பக்தர்கள், தொடர் மழையிலும் விண்ணை பிளக்கும் அளவிற்கு, அரோகரா என, பக்தி முழக்கமிட்டு அண்ணாமலையாரை வழிபாடு செய்தனர்.நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மகா தீபம் ஏற்றப்படுகிறது. 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மாலை 6 மணியளவில் மகா தீபம் ஏற்றப்படும் நிலையில், அடுத்த 11 நாட்களுக்கு ஜோதி வடிவில் அண்ணாமலையார் காட்சி தர உள்ளார்.