திருவண்ணாமலை அருகே ஒன்றரை அடி நிலத்திற்காக உறவினருடன் ஏற்பட்ட தகராறில், மீன் வியாபாரியும் அவரது மனைவியும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளனர். சர்வேயர் மூலம் நிலத்தை அளந்து கல் நட்ட பிறகும் அதனை ஏற்றுகொள்ளாமல் மல்லுக்கு நின்ற தம்பதி, தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், வேட்டைக்காரன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த குமார் - பூங்கொடி தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன்கள் உள்ள நிலையில், மீன்பிடித்து அதனை விற்று பிழைப்பு நடத்தி வருகிறார் குமார். இவரது வீட்டின் அருகே உறவினரான சரவணன் என்பவரது வீடு உள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனமழை பெய்தபோது சரவணன் வீட்டின் முன்பு தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றதால் அவரது மனைவி பிரியா, குமார் வீட்டின் ஓரமாக சிறிய பள்ளம் தோண்டி தண்ணீரை வெளியேற்றினார். அதனை பார்த்த குமாரின் மனைவி பூங்கொடி, எதற்காக எங்கள் வீட்டின் ஓரமாக பள்ளம் தோண்டி தண்ணீரை வடிய வைக்க வேண்டும் என கூறி, பிரியாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தங்களுக்கு சொந்தமான இடத்தில் பள்ளம் தோண்டியதாகவும் அதற்கு யாரிடமும் அனுமதி வாங்க தேவையில்லை என்றும் கூறி உள்ளார். ஒன்றரை அடி இடம் தான். ஆனாலும், அது தங்களுடைய இடம் என சரவணனுக்கும் குமாருக்கும் நீண்ட நாட்களாகவே சண்டை நடந்து கொண்டிருந்தது. வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்லும் சரவணன் 6 மாதத்திற்கு ஒருமுறை தான் வீட்டுக்கு வருவார்.அதனால், இடப்பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டினால்தான் மனைவி வீட்டில் நிம்மதியாக இருக்க முடியும் என்றெண்ணி ஒரு சர்வேயரை அழைத்து வந்து இடத்தை அளக்க வைத்துள்ளார். அதில், குமாரின் வீட்டை ஒட்டி உள்ள ஒன்றரை அடி நிலம் சரவணனுக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. அதனால், சர்வேயர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளரை வைத்து குறிப்பிட்ட அந்த நிலம்வரை சரவணன் கல் நட்டு வைத்துள்ளார். தனக்கு சொந்தமான இடத்தில் எப்படி கல் நட்டு வைக்கலாம் என மல்லுக்கு நின்ற குமார், சர்வேயர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் பணம் வாங்கிவிட்டு சரவணனுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தனக்குமேல் சர்வேயர்கள் இருப்பதாகவும் அவர்களை அழைத்து வந்து நிலத்தை அளந்து பார்த்துக் கொள்ளலாம் எனவும் சர்வேயர் கூறி உள்ளார். ஆனாலும், குமாரும் அவரது மனைவியும் அதனை ஏற்றுக்கொள்வதுபோல் தெரியவில்லை. நிலத்தை அளந்தபோது டேப்பை பிடித்துக் கொண்டிருந்த பழனி மற்றும் சரவணனுக்கு ஆதரவாக பேசிய ஊர் மக்களிடமும் சண்டைபோட்ட குமார், அனைவர் மீதும் புகார் அளிக்கப் போவதாக கூறி இரு சக்கர வாகனத்தில் தனது மனைவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். வழக்கமாக ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிக ஆட்கள் இருப்பார்கள். ஆனால், சனிக்கிழமை என்பதால் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்கள் இல்லாத நிலையில் குமாரும் அவரது மனைவியும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளனர்.இதையடுத்து இருவரது அலறல் சத்தம்கேட்டு அலுவலகத்திற்குள் இருந்து ஓடி வந்த அதிகாரிகள், தீயை அணைத்ததோடு ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சரவணன் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..சரவணன் நிலத்தை அளந்து கல்நட்டதுபோன்று குமாரும் ஒரு சர்வேயரை அழைத்து நிலத்தை அளந்து பார்த்திருந்தால் யாருடைய நிலம் என தெரிந்திருக்கும் எனக்கூறும் கிராம மக்கள், அவசரப்பட்டு ஆத்திரத்தில் தீக்குளித்தது சரியான செயல் அல்ல எனவும் அறிவுரை கூறி வருகின்றனர்.இதையும் பாருங்கள் - Nigazhthagavu | தகாத உறவில் இருந்த ஆட்டோ ஓட்டுநர், சொல்பேச்சை கேட்காததால் கொ*ல | Marina Beach