திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவுக்காக, குமரி மாவட்டத்திலிருந்து, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சுவாமி புறப்பாடு, தமிழக - கேரள போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் நடைபெற்றது.திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக் காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. 1840ஆம் ஆண்டில், இந்த விழா திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வகையில் குமரி மாவட்டத்திலிருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமார கோயில் முருகன், பத்மநாபபுரம் தேவார கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சுவாமி சிலைகள் திருவனந்தபுரத்திற்கு பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. அங்கு நடைபெறும் நவராத்திரி விழாவில் வைத்து பூஜைகள் செய்த பின்னர் மீண்டும் சாமி சிலைகள் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வருவது மரபு. இந்த ஆண்டிற்கான நவராத்திரி விழா வருகிற 22ஆம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர், துப்பாக்கி ஏந்திய தமிழக மற்றும் கேரள போலீசாரின் அணிவகுப்பு மரியாதை உடன் பேண்ட் வாத்தியங்கள் முழங்க, அம்மன் ஊர்வலமாக புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் முன்பு, அம்மனுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து நான்கு ரத வீதிகளிலும் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் அம்மனை வழி நெடுகிலும் பக்தர்கள் மலர் தூவி வழி அனுப்பி வைத்தனர்.