கோவையில், 214 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்கிழமை திறந்து வைக்க உள்ள நிலையில், இந்த பூங்காவில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் உள்ளன என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.கடந்த 2011ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி நடத்திய உலக தமிழ் செம்மொழி மாநாட்டை பறைசாற்றும் வகையில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார்.அதன் பின் 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சி இருந்ததால், எந்த பணிகளும் மேற்கொள்ளாமல் இருந்த நிலையில், மீண்டும் 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின் முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், 2023ஆம் ஆண்டு, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் மத்திய சிறைச்சாலை பகுதியில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். இதன்படி முதற்கட்டமாக 167 கோடியே 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், கூடுதலாக 47 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பிரம்மாண்டமான பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தனித்துவமிக்க பூங்காவாக அமைக்க 22 விதமான வனம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி செம்மொழி வனம், மகரந்த வனம், மூலிகை வனம், நீர் வனம், நட்சத்திர வனம், நலம் தரும் வனம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. உள் கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் இயற்கை அருங்காட்சியம், திறந்தவெளி அரங்கம், இயற்கை உணவகம், செயற்கை மலை, கழிவறை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் ஒரே இடத்தில் அமைந்துள்ளது, பொதுமக்களை அதிகம் கவர்ந்துள்ளது. பூங்காவுக்கு நடுவில் மாநாட்டு மையம், உக்கடம் கழிநீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை குழாய் மூலம் செம்மொழி பூங்காவிற்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூங்கா வளாகத்தின் தரை தளத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடம், நிலத்தடி நீர் தொட்டி, மழை நீர் வடிகால், சர்வதேச கருத்தரங்கு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் பூங்கா அமைக்கப்பட்டுள்ள நிலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.