17 நாட்களுக்குப் பிறகு பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க கோயில் நிர்வாகம் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்துள்ள திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளான குருமலை, குழிப்பட்டி, ஜல்லிமுத்தான் பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், தொடர்ந்து மழை பெய்தது. இந்நிலையில், அக்டோபர் 18ஆம் தேதி, பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதன் காரணமாக, சுற்றுலா பயணிகள் செல்லும் இரும்பு பாலம் சேதமடைந்தது.இந்நிலையில், கோயில் நிர்வாகம் சார்பில், இரும்பு பாலத்தை சீரமைக்கும் பணி, கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று பணிகள் நிறைவு பெற்றது. இன்று 17 நாட்களுக்குப் பிறகு பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க கோயில் நிர்வாகம் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டது. இதனால், பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.