வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆற்றுப்பகுதியில், ஆறு மாதத்திற்கு பின்பு, குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் சுற்றுலாத்தலங்களில் ஒன்றான கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த ஆறு மாத காலமாக, மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் பேரிடர் மீட்பு குழு, அப்பகுதியில் குளிக்கவோ, இறங்கவோ கூடாது என அனுமதி மறுத்திருந்தது. இந்நிலையில், இன்று, 6 மாத காலத்திற்குப் பின்பு கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில், ஏராளமான சுற்றுலா பயணிகள், ஆற்றில் இறங்கி குளிக்கவும், குதூகலமாக போட்டோ, செல்ஃபி எடுத்தும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். வால்பாறை பகுதிக்கு நவம்பர் ஒன்றாம் தேதி முதல் இ-பாஸ் அறிமுகப்படுத்தும் நிலையில், வரும் காலங்களில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வர வாய்ப்புள்ளது. இந்நிலையில், இங்கு குளித்து விட்டு உடை மாற்றுவதற்கு உடை மாற்றும் அறை வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் நகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.