ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என கூறினார். திரைப்படம் பார்க்கச் சென்ற முதலமைச்சருக்கு விவசாயிகளை பார்க்க நேரமில்லை என விமர்சித்த அவர், தலைமைச் செயலகத்தில் அழுகிப்போன பயிர்களை டிரேயில் வைத்து பார்த்ததாக சாடியதுடன், ஒரு கட்சியின் பொதுச் செயலாளருக்கு கெடு விதித்தவரை எப்படி கட்சியில் வைத்திருக்க முடியும் எனவும் செங்கோட்டையன் குறித்து ஆவேசப்பட்டார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 7ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் தொடங்கினார். 174 சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்தித்த இபிஎஸ், 175வது தொகுதியாக ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். எம்ஜிஆர், ஜெயலலிதாவை வணங்குவதாகக் கூறி உரையைத் தொடங்கிய இபிஎஸ், யார் யாரோ கண்ட கனவை நொறுக்கிவிட்டதாகவும் அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெல்லும் எனவும் கூறினார். செங்கோட்டையன் குறித்து பேசிய இபிஎஸ், ஓட்டு கேட்பதற்கு தொகுதி மக்களிடம் வந்த செங்கோட்டையன், ராஜினாமா செய்யும் முன் கேட்டாரா என கேள்வி எழுப்பினார். கட்சிக்கு எதிராக செங்கோட்டையன் செயல்பட்டதாகக் கூறி, அதுதொடர்பான காட்சிகளை எல் இ டி திரையில் காண்பித்து சரமாரியாக குற்றம்சாட்டினார். திட்டமிட்டு கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக கட்சியில் இருந்துகொண்டே, கட்சிக்கு துரோகம் செய்தவர் செங்கோட்டையன் எனவும் தெரிவித்தார். கனவுத் திட்டமான அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு யாருடைய உதவியும் கேட்காமல் மாநில அரசின் நிதியில் செயல்படுத்தியதாக கூறிய இபிஎஸ், முதலமைச்சரைப் போல் மத்திய அரசிடம் கேட்கவில்லை என்றதுடன் இந்த திட்டத்தின் 20 சதவீத பணிகளை திமுக ஆட்சியில் 3 ஆண்டு காலம் கிடப்பில் போட்டு விட்டதாகவும் சாடினார்.விவசாயிகளின் பச்சை துரோகி என தன்னை முதலமைச்சர் விமர்சிப்பதைச் சுட்டிக் காட்டிய இபிஎஸ், விவசாயம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என வினவினார். நமக்கு நாமே திட்டத்தில் சேலத்தில் கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் சாலை போட்டுச்சென்றவர் ஸ்டாலின் எனவும் சாடினார். அழுகிப் போன பயிர்களை டிரேயில் வைத்து பார்க்கும் முதலமைச்சர் இந்தியாவிலேயே யாருமில்லை எனவும் விமர்சித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும், சிறுமி முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை என்றதுடன் கொங்கு மண்டலத்தில் முதியோரை கொலை செய்து கொள்ளை அடிப்பதாகவும் கூறினார். ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் வகையில் 7.5% உள் இடஒதுக்கீடு கொண்டு வந்ததாக குறிப்பிட்ட இபிஎஸ், திமுக ஆட்சியில் மின் கட்டணம், குப்பை வரி, உணவுப்பொருள்களின் விலை, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டதாகவும் டாஸ்மாக்கில் கூடுதலாக 10 ரூபாய் வசூல் செய்து 4 ஆண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்திருப்பதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.முதலீடுகள் தொடர்பாக முதலமைச்சர் பச்சைப் பொய் கூறுவதாக சீறிய இபிஎஸ், கமிஷன் பிரச்சனையால் கொரிய நிறுவனம் ஒன்று ஆந்திராவுக்குச் சென்று விட்டதாகவும் புகார் கூறினார். உங்களுடன் ஸ்டாலின் என்று நான்காண்டு கழித்து முதலமைச்சர் மக்களிடம் வந்திருப்பதாக விமர்சித்த இபிஎஸ், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது புகார் பெட்டி என்று திட்டம் கொண்டுவந்து மனுவை வாங்கி பிரச்னையை தீர்ப்பேன் என்றார், தீர்த்தாரா? என்று வினவினார். அதிமுக அழுத்தத்தால் தான் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படுவதாகவும் அதுவும் வேறு வழியின்றி 28 மாதங்கள் கழித்து கொடுத்ததாகவும் கூறிய இபிஎஸ், தேர்தலுக்காக தான் இதைச் செய்வதாகவும் விமர்சனம் செய்தார்.திமுக ஆட்சியில், அக்கட்சியின் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான மருத்துவமனையிலேயே கிட்னியை திருடுவதாக கூறிய இபிஎஸ், அதிமுக ஆட்சி அமைந்ததும் இதுகுறித்து முழு விசாரணை நடத்தப்படும் எனக் கூறி, பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.