கோவை மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டத்தில் டம்ளரை தூக்கி வீசிய விவகாரத்தில் அதிமுக கவுன்சிலர்கள் 9 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.கூட்டத்தில் தி.மு.க., அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அதிமுக கவுன்சிலர் முகமது இப்ராகிம் என்கிற சலீம் தண்ணீர் குடிப்பதற்காக வைத்திருந்த டம்ளரை தூக்கி தரையில் வீசியடித்தார். மேலும், மற்றொரு அதிமுக கவுன்சிலர் சுனில்குமார் மன்றத்தின் பார்வைக்காக வைத்திருந்த தீர்மான நகலை கிழித்து எறிந்தார். இதையடுத்து நகர்மன்றத் தலைவர் மெஹரீபா பர்வீன், இனிவரும் கூட்டங்களில் பங்கேற்க தடை விதித்ததால் அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அதிமுக கவுன்சிலர்கள் மீது நகராட்சி ஆணையர் அமுதா போலீஸில் புகார் செய்தார்.