தென்காசி மாவட்டத்தில் அதிவேகத்தில் சீறிபாய்ந்து சென்று கொண்டிருந்த இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணம் அதிவேகமே என்ற நிலையில் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வரும் KAYESR பேருந்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை பாய்ந்துள்ளது. ராஜபாளையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு KAYESR என்ற தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. தென்காசியை நோக்கி சென்று கொண்டிருந்த இப்பேருந்தில் மாணவர்கள், பணிக்கு செல்வோர் என பலதரப்பட்ட மக்கள் பயணித்துள்ளனர். கொல்லம் - திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில் பேருந்தை ஓட்டுநர் அசுர வேகத்தில் ஓட்டி சென்றதாக சொல்லப்படுகிறது. மேலும் முன்னால் செல்லும் வாகனங்களை முந்தி செல்ல வேண்டுமென கண் முன் தெரியாமல் பேருந்தை இயக்கியதாக கூறப்படுகிறது. அதேசாலையின் எதிரே திசையில்,தென்காசியிலிருந்து புறப்பட்ட எம்.ஆர்.கோபாலன் என்ற பேருந்தும் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அச்சம்பட்டி பகுதியில் வேகத்தில் சீறி பாய்ந்த KAYESR பேருந்து கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த எம்.ஆர்.கோபாலன் பேருந்து மீது நேருக்கு நேர் படுபயங்கரமாக மோதியது. இரு பேருந்திலும் பயணிகள் சீட்டின் மீதும், இரும்பு கம்பிகளும் மீது முட்டிக்கொண்டு தூக்கி வீசப்பட்டனர். இரு பேருந்துகளின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கிய நிலையில் ரத்தம் உடம்பில் வழிந்தோட அச்சத்தில் பயணிகள் அலறி துடித்தனர். விபத்து நேர்ந்ததை பார்த்ததும் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை ஆங்காங்கே போட்டுவிட்டு படுகாயமடைந்தவர்களை மீட்க தொடங்கினர். பிரைவேட் பஸ்கள் மோதிக்கொண்ட இவ்விபத்து 7 பேரின் உயிரை காவு வாங்கியுள்ளது. அதில், கடையநல்லூரை சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளியின் ஆசிரியை தேன்மொழி, வருவாய்த்துறை அலுவலர் கற்பகவள்ளி பணிக்கு பேருந்தில் சென்றுகொண்டிருந்த நிலையில், எமனாக வந்த பேருந்தால் உயிர் பறிபோனது. இவ்விபத்தால் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த கோர விபத்து நிகழ்ந்த இடத்தில் தென்காசி ஆட்சியர் கமல்கிஷோர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் ஆய்வு மேற்கொண்ட நிலையில் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோரிடமும் நலம் விசாரித்தனர். அதிவேகமாக இயக்கியதாக KAYESR பேருந்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. KAYSER நிறுவனத்தின் பேருந்துகள் விருதுநகர், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானவை இயங்கும் நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக, இதே பேருந்து விபத்தில் சிக்கிய நிலையில் 3 பேரின் உயிரை காவு வாங்கியது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக கூட KAYESR நிறுவனத்தின் இரு பேருந்துகள் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருவேறு இடங்களில் விபத்துக்குள்ளான நிலையில் 2 பெண்கள் பலியாயினர். KAYESR பேருந்துகள் அடிக்கடி விபத்தில் சிக்குவதற்கான காரணம் அதிவேகம் தான் என்ற குற்றச்சாட்டு உள்ளது. பொதுவாக தனியார் பேருந்துகளை முன் அனுபவம் இல்லாத இளைஞர்களே இயக்கும் நிலையில், குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டும் என்பதற்காகவும், அரசு பேருந்தோ அல்லது பிற பேருந்துகளோ பயணிகளை ஏற்றுவதற்கு முன் முந்தி செல்ல வேண்டும் என்பதற்காகவும் அதிவேகத்தில் சீறி பாய்வதாக குற்றச்சாட்டு இருக்கிறது. இதுபோததற்கு செல்போன்களை பேசிக்கொண்டும், அரட்டை அடித்துக் கொண்டும் பேருந்துகளை இயக்குவதால் விபத்துகள் நேர்வது தொடர்கதையாகியுள்ள நிலையில் போக்குவரத்து விதிமுறைகளை காற்றில் பறக்கவிடும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே, பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.