பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து : நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான மாஞ்சோலையில் இயங்கி வந்த தனியார் தேயிலை தோட்ட நிறுவனம் கடந்த ஆண்டு அதன் உற்பத்தியை நிறுத்தியது. தொடர்ந்து அங்குள்ள தேயிலை தயார் செய்யும் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களை அகற்றும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதன்படி இன்று மாஞ்சோலை தேயிலை நிறுவனத்தில் இருந்த பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று மணிமுத்தாறு நோக்கி கீழே வந்தது. லாரி மாஞ்சோலை குரூஸ் மொட்டை என்ற பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உட்பட லாரியில் இருந்த நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக மாஞ்சோலையில் இருந்த தொழிலாளர்கள் இதுகுறித்து ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவித்தனர். மலைப்பகுதி என்பதால் ஆம்புலன்ஸ் வருவதற்குள் தொழிலாளர்கள் லாரியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தொழிலாளர்கள் உதவியுடன் நான்கு பேரும் மீட்கப்பட்டு அங்குள்ள தேவாலய பாதிரியாரின் வாகனம் மூலமாகவும் ஆம்புலன்ஸ் மூலமாகவும் கீழே அனுப்பி வைத்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் மாஞ்சோலைப் பகுதியில் இயங்கி வந்த மருத்துவமனை மூடப்பட்டதால் காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை கூட அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. Related Link பெண் அளித்த புகாரின் பேரில் இளைஞர் கைது