திருவாரூர் மாவட்டம் கமலாபுரம் அருகே மேல அனக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் 37 வயது. இவர் கமலாபுரம் பகுதியில் கட்டுமான பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவருக்கு சொந்தமான டிராக்டரில் ஜல்லியை நிரப்பி தனது கடையின் அருகே நிறுத்தி வைத்திருந்தார். எப்பொழுதும் போல் நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டு இன்று காலை கடையை திறப்பதற்கு வந்துள்ளார். அப்பொழுது கடையில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகானந்தம் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டார். அதில் முகத்தில் குரங்கு தொப்பி அணிந்து கொண்டு பச்சை கலர் வேஷ்டி அணிந்து கொண்டு ஒரு நபர் ஜல்லி ஏற்றி நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை திருடிச் செல்லும் காட்சிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த முருகானந்தம் நேரடியாக திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது சம்பந்தமாக முருகானந்தம் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவாரூர் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திருட்டு போன டிராக்டரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த டிராக்டரின் மதிப்பு சுமார் 5 லட்சம் இருக்கும் என கடையின் உரிமையாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். கடை வாசலில் ஜல்லி நிரப்பிய டிராக்டர் திருடு போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Related Link கல்குவாரி லாரிகளை சிறைபிடித்து மக்கள் சாலை மறியல்