கரூர் அருகே லாரி பட்டறையில் ஏற்பட்ட தீவிபத்தில் கல்லூரி பேருந்து மற்றும் 3 லாரிகள் எரிந்து எலும்புக் கூடாகின. சுக்காலியூர் பகுதியில் திருச்சி - தேசிய நெடுஞ்சாலை அருகே ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான லாரி பழுது பார்க்கும் பட்டறையில் தனியார் கல்லூரி பேருந்து மற்றும் 5-க்கும் மேற்பட்ட லாரிகளும் நிறுத்தி வைக்கப்பட்டு பழுது பார்க்கும் பணி நடைபெற்றது. அப்போது, லாரி ஒன்றுக்கு வெல்டிங் வைத்தபோது எதிர்பாராத விதமாக லாரியில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. பட்டறையில் அதிக அளவில் ஆயில் கேன்கள் இருந்ததால் தீ மளமளவென பற்றி கொளுந்து விட்டு எரிந்ததில், தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.