புதுச்சேரி வந்த மத்திய அமைச்சர் மான்சுக் மாண்ட்வியா, தனது வாகனம் வராததால் பாதுகாவலர்களை கடிந்து கொண்டபடி, அரை கிலோ மீட்டர் தூரம் சாலையில் நடந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.பாஜக தேசிய தலைவரான நட்டாவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், கட்சியின் செயல்தலைவராக பீகாரின் அமைச்சராக இருந்த நிதின் நபினை நியமித்து அதிரடி காட்டியது பாஜக. பதவியேற்ற மறுநாளே பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் திட்டமிட்டு சூறாவளி போல சுழல ஆரம்பித்துவிட்டார் நிதின் நபின்.அந்தவகையில், புதுச்சேரிக்கு பயணம் மேற்கொண்ட நிதின் நபினுக்கு புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் தடல்புடல் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. புதுவைக்கு முதல்முறை வந்த அவருக்கு உறுதுணையாக இருப்பதற்காகவும் வரவேற்பு ஏற்பாடுகளை கவனிப்பதற்காகவும் முன்னதாகவே புதுவைக்கு வந்திருந்த அம்மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும், நிதின் நபினுக்காக மாநில எல்லையான கோரிமேடு எல்லையில் காத்திருந்தார்.நிதின் நபின் புதுவையை அடைந்ததும், மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், மாநில பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு வாகனத்தில் ஏற்றப்பட்டு சாலை வலம் அழைத்துச் செல்லப்பட்டார். புதுச்சேரி பாஜக மாநில தலைவர் ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் வரவேற்பு வாகனத்தில் ஏறிய நிலையில், தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது வாகனத்தில் வருவதாக கூறி கழண்டுகொண்டார்.வரவேற்பு வாகனம் சென்றுவிட்ட நிலையில், தனது கார் எங்கே என உதவியாளர்களிடம் மன்சுக் மாண்டவியா கேட்ட நிலையில், காரானது முன்னே சென்று விட்டதாக கூறி, பகீர் கிளப்பியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாண்டவியா, காரை யூடர்ன் போட்டு வரச் சொல்லுமாறு கூறினார். ஆனால், கடும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில், அது சாத்தியமில்லை என உதவியாளர்கள் கூறியதால், காரை அங்கேயே ஓரமாக நிறுத்துமாறு கடிந்து கொண்டார்.தனது உதவியாளர், பாதுகாவலர்கள் என உடன்வந்தவர்களிடம் கடுகடுத்தபடியே நடக்கத் தொடங்கிய மன்சுக் மாண்டவியா, சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு காரை தேடி அலைந்தார். மன்சுக் மாண்டவியாவை சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் ஆச்சர்யத்துடன் பார்த்த நிலையில், ஒருவழியாக காரை அடைந்த அமைச்சர் மீண்டும் பாஜக குழுவுடன் ஐக்கியமாகினார்.