சென்னை, கண்ணகி நகரில், அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த பெண் தூய்மைப் பணியாளர் உயிரிழந்தார்.கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி, இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி, 30 வயதான வரலட்சுமி. இவர்களுக்கு, 10 வயதில் பெண் குழந்தையும், 8 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.வரலட்சுமி, கண்ணகி நகர் பகுதியில், சென்னை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல், தூய்மை பணிக்காக திருவான்மியூர் புறப்பட்டுள்ளார். அப்போது, கண்ணகி நகர் 11ஆவது குறுக்கு தெருவில் நடந்து சென்றபோது சாலையில் தேங்கியிருந்த மழை நீரில், சாலை குறுக்கே சென்ற மின்சார வயரில் இருந்து மின்சாரம் கசிந்து, வரலட்சுமி மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சக தூய்மை பணியாளர்கள் அப்பகுதி மாமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கண்ணகி நகர் போலீஸார், பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.மின்சார வயரை பூமிக்கு அடியில் புதைக்காமல் சாலை மேலே அலட்சியமாக போடப்பட்டு இருந்ததே, தூய்மை பெண் பணியாளர் உயிரிழந்ததற்கு காரணம் என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். பலமுறை மின் வாரிய துறைக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.இந்நிலையில், உயிரிழந்த வரலட்சுமி குடும்பத்தாருக்கு மின்சார வாரியம் மற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் 20 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவியை வழங்கினார். பின்னர் உயிரிழந்த வரலட்சுமி குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக அவர் தெரிவித்தார்.